தம்பி உடையான் படைக்கு அஞ்சான் – இந்த ஒரு பழமொழியை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரத் திரைப்படத்தையே எடுத்துவிட்டார் லிங்குசாமி. இவருடைய முதல் படம் ஆனந்தம் என்று சொன்னால் இன்று பலராலும் நம்பக்கூட முடியாது. அந்த அளவுக்கு மசாலா இயக்குனர் ஆகி விட்டார்.
எட்டு வருடங்களுக்கு பிறகு லிங்குசாமியும் மாதவனும் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த எட்டு வருடமாக commercial cinema என்னும் பாதையிலிருந்து சிறிதும் விலகாமல் பயணித்துக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. மாதவனோ மெயின் ஹீரோவிலிருந்து செகண்டரி ஹீரோவாகிவிட்டார். (title card இல் ஆர்யா பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள்). படத்தில் கதை என்று பெரிதாக எதுவும் இல்லை. இதுவரை தமிழ் சினிமாவில் காவல் துறையை மையமாக வைத்து வந்திருக்கும் படங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சிகளையும் கதையமைப்பையும் சுட்டு வேகமான திரைக்கதையுடன் கோர்த்து ஒரு முழு நீள action திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். படத்தின் இரண்டாவது frameஇல் வரும் காட்சிகளைப் பார்த்தால் எட்டாவது frameஇல் என்ன வரும் என்று யூகித்து விடலாம். இதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
பயந்தாங்குளி அண்ணனாக மாதவன். வீராதி வீரன் சூராதி சூரனாக தம்பி ஆர்யா. பயந்த சுபாவம் உள்ள அண்ணனுக்கு அப்பாவின் போலீஸ் வேலை கிடைத்தாலாவது தைரியம் வரும் என எண்ணுகிறார் ஆர்யா. ஆனால் காவல்துறை அதிகாரியாக மாதவன் செய்ய வேண்டிய அனைத்து வேலையையும் substitute ஆக இருந்து கொண்டு தம்பியே செய்கிறார். வில்லன்களை அடித்து நாஸ்தி பண்ணுகிறார். இதனால் ஊரே மாதவனைப்பார்த்து மிரள்கிறது. இதற்கிடையில் மாதவனுக்கும் சமீரா ரெட்டிக்கும் கல்யாணம் நடக்க, ஆர்யாவும் சமீராவின் தங்கையாக வரும் அமலா பாலும் காதலிக்கிறார்கள். இரண்டாவது பாதியில் மாதவனைப்பற்றிய உண்மை தெரியவந்து வில்லன்கள் அவரை அடித்து ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட தம்பி வந்து காப்பாற்றுகிறார்.
முதல் பாதியில் காட்சிக்கு காட்சி பயந்து நடுங்கும் மாதவன் இரண்டாவது பாதியில் தன் தம்பியின் வீர ஆவேச பேச்சைக்கேட்டும், போலி போலீஸ் என்று வில்லன்கள் கேலி செய்வதை பார்த்தும் பொங்கி எழுகிறார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஊரில் இருக்கும் யானை, சிங்கம், புலி, கரடி, நாய், பூனை, எலி, கொசு (அதாவது ரௌடிகளை) என அனைத்தையும் வேட்டை ஆடுகிறார்கள். அதோடு நில்லாமல் சில சமயங்களில் படம் பார்க்க வரும் மக்களையும் சேர்ந்து வேட்டை ஆடி விடுகிறார்கள்.
மாதவன் காவல் அதிகாரி பாத்திரத்துக்கு தொப்பையுடன் நன்றாக பொருந்தி இருக்கிறார். பயந்தாங்குளியாக நடிக்கும் காட்சிகளில் உடம்பின் ஒவ்வொரு cell லிலும் பயத்தை காட்டுகிறார். இதைப்பார்க்கும் போது எங்கே நிஜ வாழ்க்கையிலேயும் அவர் பயந்தாங்குளியாக இருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆர்யா வழக்கம் போல துருதுருவென திரையில் வந்து போகிறார். அமலா பால் பாடல்களுக்கும் காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார். அஷுதோஷ் ரானா வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ராஜஸ்தான் சேட்டு போல் இருப்பவருக்கு முறுக்கு மீசையும் ஜிப்பாவும் போட்டு விட்டு திருநெல்வேலி அண்ணாச்சி என்று சொன்னால் நம்மூர் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும் இயக்குனர். இந்த படத்தில் புது யுக்தியாக நாயகி சமீரா ரெட்டியையும் வில்லன்களை பார்த்து ஏய் ஊய் என்று கத்தி punch dialogue பேச வைத்திருக்கிறார் இயக்குனர் . நாசரும் தம்பி ராமையாவும் குறிப்பிடவேண்டிய மற்ற பாத்திரங்கள். இருவரும் திரையில் சிறிது நேரமே வந்தாலும் திரையரங்கில் சிரிப்பலைகளை உண்டு பண்ணுகிறார்கள்.
பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை இல்லை என்றால் படம் படுத்து விடும். ‘அக்காவிற்கு ஏற்ற மாப்பிளை’ பாடலில் சமீரா ரெட்டியும் அமலா பாலும் போடும் condition களை நம்மூர் பெண்கள் போட ஆரம்பித்தால் கண்டிப்பாக யாருக்கும் கல்யாணம் நடக்காது. (நா.முத்துக்குமாருக்கு அவர் மனைவி என்ன condition போட்டாரோ தெரியவில்லை!). நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு கச்சிதம். பிருந்தா சாரதியின் வசனங்கள் பல இடங்களில் காதைக் கிழித்தாலும் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வை தூண்டுகின்றன. குறிப்பாக “எனக்கே shutter ஆ” என்று மாதவன் பேசும் வசனம் ரசிகர்களின் விசில் சத்தத்தை குறிவைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் தமிழ் படங்களில் காவல் துறையை ரௌடிகளின் assistant போலவும் அல்லக்கைகள் போலவும் காட்டிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்க மாப்பிள்ளையை துரத்தி அடிப்பது, போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து ரௌடிகள் மிரட்டுவது என்று படத்தில் commercial மொக்கைகள் தாராளம்.
என்னதான் வேட்டை B மற்றும் C centre களில் வசூல் வேட்டை புரிந்தாலும் தமிழ் சினிமாவின் நீண்ட நெடும் நதியான commercial சாக்கடையில் கலந்து விடுகிறது.
[rating: 3.5/5]
இந்த மாதிரி படம் நமக்கு அலுத்துப்போக தொடங்கிவிட்டது! ஆனால், மற்றவர்களுக்கு இது வியப்பாக இருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் இந்தப் படத்தை விமர்சனம் செய்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
http://nyti.ms/x3Otjy
நான் இன்னும் படம் பாக்கலை. ஆனால், மசாலா படங்கள், கமர்சியல் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்! 🙂
இந்த மாதிரி படம் நமக்கு அலுத்து போனதென்னவோ உண்மை தான்! ஆனா, வெளிநாட்டுக்காரனுக்கு இது விந்தியா இருக்கு! 🙂
நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த விமர்சனத்தை நீங்க படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்! http://nyti.ms/x3Otjy
எனக்கு மசாலா படங்கள், கமர்சியல் படங்கள் பிடிக்கும்! ஆனா, இன்னும் இந்தப் படத்த பாக்கல! பாக்கணும்…
[…] “வேட்டை”(Vettai) : நிறைய ஓட்டை […]