இந்த படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் என் மனதில் எழுந்த முதல் கேள்வி ஏன் இந்த படத்திற்கு மூன்று என பெயர் வைத்தார்கள் என்பது! ஒருவேளை ரசிகர்கள் அனைவரும் தங்களது உயிரை பணயம் வைத்து மூன்று மணி நேரம் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்ததை பாராட்டும் நோக்கில் வைத்திருக்கலாம் என்று நானே என் மனதை தேற்றிக்கொண்டேன். இதைப் படித்தவுடனேயே படம் எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்னும் உங்களுக்குப் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் மேலே படியுங்கள்.
தனுஷும் ஸ்ருதியும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலிக்கிறார்கள். அந்தக் காதல் அப்படியே பல வருடங்களாக தொடர்ந்து கடைசியில் இருவரும் வீட்டில் உள்ள எதிர்ப்பையும் மீறி திருமண ம் (திருமணம் pub இல் நடைபெறுவதாக காட்டுவதெல்லாம் 3much) செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் இடையே உள்ள காதலை பல இடங்களில் சுவாரஸ்யமாக காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா. இதற்காக தனுஷையும் ஸ்ருதியையும் காதல் காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடிக்க வைத்திருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு ரொம்பத் தாராளமான மனது தான்! இப்படி ஒரு மனைவி கிடைக்க தனுஷ் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எவ்வளவு தான் கஷ்டப்பட்டிருந்தாலும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையேயான அன்யோன்யம் (chemistry) சுத்தமாக work out ஆகவில்லை. அவர்களுக்கு இடையே இருக்கும் காதலை ரசிகர்களால் சிறிதும் கூட உணர முடியவில்லை. படத்தின் முதல் பாதியின் ஒரே ஆறுதல் சிவா கார்த்திகேயன் தான். நான்கைந்து காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அசுரக் கடுப்பில் இருக்கும் ரசிகர்களை சிறிதேனும் சிரிக்க வைக்கிறார். ஆனால் நமது துரதிர்ஷ்டம் – படத்தின் இரண்டாவது பாதியில் ஆளையேக் காணோம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு பதில் விஜய் தொலைக்காட்சியின் “அது இது எது” வில் நடிப்பதே மேல் என அவர் நினைத்திருக்கக் கூடும். அவரது கால்ஷீட் கிடைக்காததால் இரண்டாவது பாதியில் சிங்கப்பூர் சென்று விட்டதாக சமாளித்து விடுகிறார் இயக்குனர்.
இரண்டாவது பாதியில் தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை கண்டு கேட்டிராத Bipolar Disorder எனும் விசித்திரமான நோயை அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர். இந்த நோய் உடையவர்கள் திடீரென கோபப்படுவார்கள், திடீரென மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள், திடீர் திடீர் என்று சம்பந்தமே இல்லாமல் யாரையாவது போட்டு அடிப்பார்கள் என அந்நோய்க்கு விளக்க உரை வேறு. ஆகமொத்தத்தில் தனுஷ் படத்தில் ஒரு பைத்தியம் என்பதைத்தான் இப்படி சுற்றி வளைத்து சொல்ல வருகிறார் இயக்குனர். இந்தப் பைத்தியக்கார நோயை பற்றிப் புரிந்து கொள்வதற்கு முன்னரே படத்தை பார்ப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. இந்த நோயினால் தனுஷ் கண்களுக்கு மட்டும் அவ்வபோது பச்சை நிறத்தில் உருவங்கள் தெரிகின்றன. அந்த உருவங்கள் ஏன் தெரிகின்றன, எதற்கு தெரிகின்றன என்று கடைசி வரை நமக்கும் புரியவில்லை இயக்குனருக்கும் தெரியவில்லை.
படத்தின் முதல் பாதியை மட்டும் எடுத்து முடித்து விட்டு படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பி இருந்த வேளையில் மயக்கம் என்ன படத்தை ஐஸ்வர்யா பார்த்திருக்கக் கூடும். அப்படியே “மயக்கம் என்ன” வை மீதிப் படமாக எடுத்து விட்டார்! தனுஷின் நடிப்பும் அவரது முந்தைய படத்தின் நடிப்பை அச்சு அசலாக பிரதிபலிக்கிறது. தனுஷ் எங்கே ஒரே விதமான நடிப்பை தனது எல்லாப் படங்களிலும் வெளிப்படுத்துகிறாரோ என்ற எண்ணம் நம்முள் தோன்றுவதை மறுக்க முடியாது. சுருதி ஹாசன் நடிக்க முயற்சித்திருக்கிறார். தனது முந்தைய படமான ஏழாம் அறிவுக்கு இந்தப் படத்தில் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அவர் அழுவதைப் பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வருகிறது. அழுவாச்சி காட்சிகளில் அப்பா கமலையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது! படத்தில் உருப்படியாக நடித்திருப்பவர் தனுஷின் நண்பராக வரும் சுந்தர் ராம் தான். மிகவும் கச்சிதமான அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரபு, பானுப்பிரியா, ரோகினி ஆகியோர் நாங்களும் படத்தில் இருக்கிறோம் என்று அவ்வபோது திரையில் தலையை காட்டி விட்டுச் செல்கிறார்கள்.
படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் இசை தான். தனது முதல் படம் வெளிவருவதற்கு முன்னரே கொலைவெறி பாடலின் மூலம் புகழின் இமயத்திற்கு சென்று விட்டார் இசையமைப்பாளர் அனிருத். எனவே அவரிடம் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார். ஆனால் அவரது பாடல்களை படமாக்கிய விதம் படு மோசம். படத்தில் போ நீ போ பாடலைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தனுஷ் ஐயப்ப பக்தனாகிறார். இதே போல் படம் முழுவதும் பாடல்களுக்காகவே சில காட்சிகள் புகுத்தப் பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. முதல் பாதியில் பாராட்டப் பட வேண்டிய சில விஷயங்கள் இருந்தாலும் படத்தின் இரண்டாவது பாதியால் அவையாவும் காற்றோடு காற்றாக போய் விடுகின்றன. கடைசிக் காட்சியில் தனுஷ் தற்கொலை செய்துகொள்வதற்காக அரை மணி நேரமாக கத்தியை தனது கழுத்தின் அருகே வைத்து நமது பொறுமையை சோதிக்கிறார். கழுத்தறுத்து தற்கொலை செய்து கொள்கிறேன் பேர்வழி என்று நமது கழுத்தை அறுத்து விடுகிறார். அதுவரை பொறுமையாக படம் பார்த்தவர்கள் கூட இந்தக் காட்சியை பார்க்க முடியாமல் அரங்கை விட்டு வெளியேறுவதை காண முடிந்தது.
ஐஸ்வர்யா இன்னும் சிறிது காலத்திற்கு இது போன்ற படங்களை இயக்காமல் வீட்டில் தனது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதே தமிழ்நாட்டிற்கு நல்லது.
[rating:4.5]
Waste review
[…] “3”: Why this Kolaveri? […]