மெரினா – பொங்கல் சீசன் ஒய்ந்த பின் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம். படம் வெளிவரும் முன்னரே ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை‘ என்ற பாடலை (promo song) வெளியிட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பாண்டிராஜின் படம் என்பதாலும் சின்னத்திரை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாயிற்று. இவ்வனைத்து எதிர்பார்புகளையும் இத்திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து மெரினா கடற்கரையில் சுண்டல் விற்றுத்திரியும் விடலை பசங்களின் வாழ்க்கை தான் கதை. படம் இரண்டரை மணி நேரம் வர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே சிவகார்த்திகேயனின் காதல் கதை படத்தில் துணைக்கதையாக இணைக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டையில் தனது சித்தப்பாவின் பிடியிலிருந்து தப்பித்து சென்னை வருகிறான் அம்பிகாபதி. காசுக்காக மெரினாவில் தண்ணீர் விற்க ஆரம்பிக்கிறான். முதலில் அங்கிருக்கும் மற்ற சிறுவர்களுடன் சண்டை போட்டாலும், பின்னர் அனைவருக்கும் அவனைப் பிடித்துப் போகவே அவர்களுக்கிடையே நட்புறவு ஏற்படுகிறது. சிறுவர்கள் மட்டும் இல்லாமல் அங்கிருக்கும் பிச்சைக்கார தாத்தா, குதிரைக்காரன், பாடல்கள் பாடி கடற்கரைக்கு வருவோரை உற்சாகப்படுத்தும் களக்கூத்தாடி நபர், தபால்காரர் என அனைவரையும் நண்பர்களாக்கிக் கொள்கிறான். இதற்கிடையில் அம்பிகாபதியின் நண்பன் கைலாசத்தை காவல் துறை அதிகாரிகள் காரணம் ஏதும் சொல்லாமல் பிடித்துச்செல்ல முதல் பாதி பரபரப்பாக முடிகிறது.
இரண்டாவது பாதியில் அனைத்து கதாப்பாத்திரங்களினுடைய கடந்த கால வாழ்க்கை, அவர்கள் இன்றிருக்கும் நிலைமைக்கான காரணங்கள் பற்றி விவரித்திருக்கிறார் இயக்குனர். அவர்களுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டங்கள் தான் மீதிக் கதை. மேலும் குழந்தைததத் தொழிலாளர்கள் ஒழிப்பு, அனைவருக்கும் இலவசக் கல்வி போன்ற சமூக கருத்துக்களையும் முன் வைக்கிறார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். சிவகார்த்திகேயன்-ஓவியா காதல் காட்சிகளை உண்மைக்காதலர்கள் பார்த்தால் கூட கடுப்பு தான் வரும். குறிப்பாக பிறந்த நாள் பரிசாக இட்லி parcel தரும் காட்சி படு மொக்கை. 10 குட்டுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு சிறுவனை காவல் துறை அதிகாரிகள் பிடிப்பதாக காட்டுவதெல்லாம் too much. வசனங்கள் சில இடங்களில் ‘அட’ போட வைக்கின்றன, சில நேரங்களில் மெல்லிதாக சிரிப்பை வர வைக்கின்றன ஆனால் பல நேரங்களில் ‘உச்’ கொட்ட வைக்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் பாத்திரத்தேர்வு. குட்டிப்பசங்களில் இருந்து வயதான தாத்தா வரை அனைவரும் அவரவர் பாத்திரத்துக்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், ஓவியாவின் அம்மா, சிவாவின் நண்பர் ‘தத்துவம்’ போன்ற சிறிய கதாபாத்திரங்கள் கூட நன்றாக மனதில் ஒட்டுகிறார்கள்.
இசை – புதுவரவு கிரிஷ். பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கின்றன. தமிழ்த்திரை உலகம் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம் மெரினா. ஆனால், பாடல்களை சிறப்பாக படமாக்குவதில் கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். ஆங்காங்கே தேவையில்லாத இடங்களில் பாடல்கள் வருவது போல் ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மெரினா கடற்கரையின் பல்வேறு பகுதிகளையும் அங்கே வாழும் மக்களையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய். படத்தொகுப்பாளர் (Editor) அதியப்பன் சிவாவிற்கு இது முதல் படம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
மெரினா, பசங்க திரைப்படத்தைப்போன்ற கதையமைப்பயும் கதைக்களத்தையும் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக இன்னுமொரு பசங்க கிடையாது. மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கச் செல்வது போல மெரினா திரைப்படத்திற்கு சென்று பார்த்து வரலாம்.
[rating:2]
[…] “மெரினா”(Marina): சுனாமியாக எதிர்பார்த்து புஸ் ஆன மற்றொரு படம். […]