இப்பொழுது தமிழ் சினிமாவின் புதிய டிரென்ட், படம் வெளிவரும் முன்னரே சகட்டு மேனிக்கு பப்ளிசிட்டி செய்து படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல ஒபெனிங் காண்பது. ஆனால் அநேகமான நேரங்களில் இது எதிர்மறை விளைவையே ஏற்படுத்துகின்றது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் துப்பாக்கியைத் தவிர மற்ற பெரிய இயக்குனர்கள் மற்றும் ஸ்டார்களின் படங்கள் எவையும் சரியாக ஓடவில்லை. தாண்டவம், முகமூடி, பில்லா, மாற்றானைத் தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தமும் அந்த பட்டியலில் இணைந்து விடுகிறது.
ஏற்கனவே தனது அனைத்து படங்களிலும் காதலைப் பல கோணங்களில் ரசிக்கும்படி காட்டியவர் கெளதம் மேனன். இந்தப் படத்திலும் மீண்டும் காதலையே தனது படத்தின் மையமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதலை சிறுவயது முதல் பல பருவங்களில் அந்தந்த பருவங்களுக்கே உரிய உணர்வுகளுடனும் சேஷ்டைகளுடனும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியில் படம் பார்க்கும் ரசிகர்களை பல நேரங்களில் பலிகடா ஆக்கிவிடுகிறார். பல இடங்களில் படம் ஆமையை விட மெதுவாகப் போகிறது. குறிப்பாக இடைவேளை முன்னால் ஜீவாவும் சமந்தாவும் சண்டை போடும் காட்சியை நீளமான ஒரே ஷாட்டாக எடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். அதே போல் அடுத்த நாள் திருமணத்தை வைத்துக் கொண்டு இரவு முழுவதும் ஜீவா சமந்தாவுடன் ஊர் சுற்றுவதெல்லாம் கெளதம் மேனன் சினிமாக்களில் மட்டுமே நடக்கும். மசாலா படங்களில் மட்டுமல்ல காதல் படங்களிலும் கொஞ்சம் லாஜிக் வேணும்! ஜீவாவும் சமந்தாவும் காதலில் வெற்றி பெற்று சேர்கிறார்களோ இல்லையோ மாற்றி மாற்றி கார் வாங்குகிறார்கள்.
சமந்தா படம் நெடுக அழகு தேவதையாக வலம் வருகிறார். பள்ளி மாணவியாக வரும் முற்பாதி கட்சிகளில் செம cute ஆக இருக்கிறார். சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் செய்வது போல தோன்றினாலும் அதுவும் ரசிகும்படியே இருக்கிறது. ஜீவவைக் கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் பள்ளி மாணவனாக அதுவும் பத்தாவது படிக்கும் மாணவனாக கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாரணம் ஆயிரத்தில் சூர்யா சிரத்தையெடுத்து உடம்பை குறைத்ததைப் போல ஜீவாவும் முயற்சித்திருக்கலாம். ஜீவா, சமந்தாவை விட ஒரு பாடலில் சில நொடிகளே வரும் நாணி (தெலுங்கில் இப்படத்தின் ஹீரோ) ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெறுகிறார். படத்தில் ஜீவா மட்டுமல்லாமல் அவரது அண்ணன், அப்பா என அனைவரும் வள வள என பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாவாக நடித்திருப்பவர் ராகவேந்திரா. அவரது குரல் அனைவரும் கேட்டுப் பழக்கப் பட்டது. எதற்காக அவருக்கு வேறு யாரையோ டப்பிங் பேசவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வசனங்களையும் மிகவும் cliché ஆக அமைத்திருக்கிறார் இயக்குனர். ஜீவா சடாரென்று தனது குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒரு CAT புத்தகத்தை அலமாரியில் இருந்து எடுத்துப் படித்து IIMஇல் சேருவது, “இப்போ உன் வாழ்கையில் எந்த box டிக் பண்ண போற? கல்யாணத்தையா இல்ல என் பெயரையா?” என்று நாயகனைப் பார்த்து நாயகி பேசும் வசனங்கள் எல்லாம் ஏதோ ஒரு நாவல் படிப்பதை போன்ற நாடகத்தனமான உணர்வை ஏற்படுத்துகின்றன. வழக்கம் போல படத்தின் டைட்டிலில் மட்டும் அழகான தமிழ் பெயரை வைத்து விட்டு படத்தில் பாதி ஆங்கில வசனங்கள். ஊஞ்சல், குடை என்று புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைக் கூட swing, umbrella என ஆங்கிலத்தில் பேச வைத்து, இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழையும் கொல்லப் பார்க்கிறார் இயக்குனர். வெகு விமரிசையான ஆடை அலங்காரங்கள், மாளிகை வீடுகள், நுனி நாக்கில் அங்கிலம் பேசிக்கொண்டு அலையும் மனிதர்கள் என இவரது படச் சமாச்சாரங்கள் எல்லாம் சமூகத்தின் மேல் தட்டு மக்களுக்கு வேண்டுமானால் பிடித்திருக்கலாம் (அவர்கள் எல்லாம் திரையரங்குக்கே வருவதில்லை என்பது வேறு விஷயம்). ஆனால் கண்டிப்பாகத் திரையரங்குக்கு வரும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனை இவ்விஷயங்கள் சென்றடையாது.
படம், நாயகன் மற்றும் நாயகியின் எட்டு வயது முதல் இருபத்தி எட்டு வயது வரை நடப்பதாக காண்பிக்கிறார்கள். ஆனால் தொண்ணூறுகளில் வருகிற சமந்தாவும், நிகழ் காலத்தில் வரும் சமந்தாவும் ஒரே மாதிரியான ஆடையைத் தான் அணிந்திருக்கிறார்! பழைய Nokia மொபைலைக் காட்டி காலத்தை வித்தியாசப் படுத்த நினைத்த இயக்குனர் மனிதர்களின் ட்ரெஸ்ஸிங் சென்சிலும் கொஞ்சமாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் இளையராஜாவின் இசை. ஆனால் இளையராஜாவின் ரசிகர்களது ஆசையை தவிடு பொடியாக்கியிருகிறார்கள். முதல் பாடலைத் தவிர மற்ற எல்லாப் பாடல்களையும் உடைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சிகளோடு இழைய விட்டிருக்கிறார். அதுவும் பாடல்கள் திடீர் திடீர் என மழையில் முளைக்கும் காளான் போலத் தோன்றுகின்றன. இரண்டாம் பாதியில் பத்து நிமிடங்களுக்கு ஒரு பாடல் வேறு! பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்தவில்லை என்றாலும் பெரிதாகச் சொல்லிக்கொளும்படி இல்லை. இதற்குத் தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தாரா கெளதம்! கௌதம் திரைப்படங்களை விடவும் பாடல்களைத் திறம்பட இயக்குகிறார். இவ்விஷயத்தில் ஒளிப்பதிவாளர்கள் பிரபு மற்றும் ஓம் பிரகாஷின் பங்கு பாராட்டத்தக்கது. படத்தின் ஒரே ஆறுதல் அவ்வப்போது தலை காட்டும் சந்தானம். “சுடிதார் சாயம் போனதுக்கு அப்புறம் தானே டா உங்களுக்கு எல்லாம் pant, shirt கண்ணுக்குத் தெரியும்” போன்ற வசனங்களின் மூலம் ஆங்காங்கே தனது முத்திரையைப் பதிக்கிறார். ஆனால் இடைவேளைக்குப் பின் வரும் விண்ணைத் தாண்டி வருவாயா spoof காட்சிகளெல்லாம் ஏற்கனவே நொந்து போய் இருக்கும் ரசிகனிடம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருக்கின்றன. சரி ரொமான்ஸ் எல்லாம் விண்ணைத் தாண்டி வருவாய போல இருக்கும் என எண்ணி அதையாவது ரசிக்கலாம் என்று பார்த்தால் அதையும் காமிராவைப் பின்னாடி வைத்துக் காட்டி ஏமாற்றி விடுகிறார்கள்!
பார்ப்பதற்கு அழகான நடிகர்கள், திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள், உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் என பெரிய பெரிய ஸ்டார்களால் மட்டுமே ஒரு படம் வெற்றியடைந்து விட முடியாது. ஒரு கதைக்கு அழகான திரைக்கதை அமைத்து அதற்கு மேற்கூறிய விஷயங்களின் மூலமாக உயிரூட்ட வேண்டும். அதைச் செய்வதில் கெளதம் மேனன் கில்லாடி. ஆனால் இந்தப் படத்தில் ஏனோ அது மிஸ்ஸிங். போதும் கெளதம் நீங்கள் காதல் ரசத்தைப் பிழிந்தெடுத்தது. உங்களது காதல் கசக்க ஆரம்பித்துவிட்டது!
[rating: 3.5]
[…] “நீதானே என் பொன்வசந்தம்”: ____________ […]