உதயநிதி ஸ்டாலின் தனது குலத் தொழிலான அரசியலை விட்டுவிட்டு நடிகராக அறிமுகமாகியிருக்கும் படம். நடிகராகத் தான் அறிமுகமாகியிருக்கிறாரே தவிர ஹீரோவாக இல்லை! படத்தின் ஹீரோ யார் என்பது படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கே தெரிந்திருக்கும். சரி படத்தின் கதையைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கும்போது தான் ஞாபகம் வருகிறது அப்படியொன்று படத்தில் இல்லவே இல்லை என்பது! நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு துலாவி துலாவி மைக்ரோஸ்கோபில் தேடிப் பார்த்தாலும் படத்தில் கதையைக் கண்டுபிடிக்க முடியாது. கதையே இல்லாமல் எப்படி ஒரு படம் எடுத்து அதை வெற்றிப் படமாக்குவது எப்படி என்பதை கோடம்பாக்கத்து இளம் இயக்குனர்கள் இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் வீட்டின் முன் வரிசையில் நின்று கற்றுகொள்ளலாம். சந்தானம் + ராஜேஷ் ஒரு வெற்றிக் கூட்டணி என்பது மீண்டும் ஒரு முறை இந்த படத்தின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஆனாலும் முந்தைய படமான பாஸ் என்கிற பாஸ்கரன் அடைந்த உயரத்தையும் வெற்றியையும் இந்தப் படத்தால் நெருங்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
உதயநிதியின் நடிப்பின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால் அவர் ஏதோ சுமாராக நடித்திருப்பதாகவே தோன்றுகிறது (நடிப்பதற்கு படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்). முதல் பாதியில் நன்றாக சொதப்பி இருந்தாலும் இரண்டாவது பாதியில் ஓரளவுக்குத் தேறிவிடுகிறார். படத்தில் ஓரிரு இடங்களில் தளபதி தளபதி என்று கூச்சலிடுகிறார். அவர் தனது தந்தையை நினைத்துக் கூற நமது மக்களோ இளைய தளபதியைத் தான் குறிப்பிடுகிறார் என நினைத்து கத்துகிறார்கள்! நாயகி ஹன்சிகாவுக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராது என்பது தெரிந்த விஷயமாதலால் அதை அப்படியே விட்டு விடுவோம். நடிப்பு தான் வரவில்லை என்று பார்த்தால் வசன உச்சரிப்பு படு சொதப்பல். அவருக்கு தெரிந்த ஹிந்தி பாடல்களையெல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு பாட வைத்து விட்டு அப்படியே டப்பிங் செய்திருக்கிறார்கள். அவர் பூசணிக்காய் போல் இருப்பதாக படத்திலேயே கிண்டலடித்து விடுகிறார்கள். நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அடுத்ததாக படத்தின் உண்மையான நாயகன் சந்தானத்திற்கு வருவோம். மனிதர் திரையில் வந்தாலே விசில் சத்தம் பறக்கிறது. அவர் பேசக் கூட வேண்டாம் அவரது உடையைப் பார்த்தாலேயே நமக்கு சிரிப்பு வந்து விடுகிறது. அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கம் சிரிப்பலைகளில் மூழ்குகிறது. ஒரு சில இடங்களில் அவரது காமெடி எடுபடாமல் போனாலும் தனக்குக் கொடுத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி கிடைத்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார். விமானத்தில் அவர் அடிக்கும் லூட்டியும், இறுதிக் காட்சியில் உதயநிதியின் அரைகுறை ஆங்கில சொற்பொழிவை தமிழில் மொழிமாற்றம் செய்வதும் உச்சக் கட்ட காமெடி.
இயக்குனர் ராஜேஷ் தனது படங்களில் துணை கதப்பாதிரங்களைத் தேர்வு செய்வதில் படு கில்லாடியாக இருக்கிறார். அவரது முந்தைய படங்களில் வரும் அம்மா கதாபாத்திரங்கள் போலவே இந்தப் படத்தில் நாயகனின் அம்மாவாக வரும் சரண்யாவின் பாத்திரம் படத்திலேயே மிகவும் வலுமையான பாத்திரம். அழகம் பெருமாள் மற்றும் சரண்யா இடையேயான பிரச்சனைகளையும் பின்னர் அவர்கள் மனம் திருந்தி ஒன்று சேர்வதையும் அழகாக காட்சியமைத்துள்ளார் இயக்குனர். மனைவி படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று அழகம் பெருமாளுக்கு இருக்கும் அக்கறை, படிக்காமல் திரையரங்கில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருக்கும் அவரது மகன் மேல் ஏன் இல்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. இயக்குனர் ராஜேஷ் தனது வாழ்நாளில் பாதியை டாஸ்மார்கிலேயே கழித்திருப்பார் போலும். அது அப்படியே அவரது படங்களிலும் பிரதிபலிக்கின்றது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் சுமார் ரகம். படமாக்கிய விதமும் அப்படியே. உதயநிதி கடைசிப் பாடலில் மட்டும் நடனமாட முயற்சித்திருக்கிறார். பல இடங்களில் பின்னணி இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றுகிறது. எடிட்டிங் ஒளிப்பதிவு எல்லாம் ஓகே ஓகே ரகம்.
தனது முந்தைய படங்களைப் போலவே இந்த படத்தையும் எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறியிருக்கிறார் இயக்குனர். படத்தை முடித்து வைப்பதற்காக இந்த முறை ஆர்யா வருகிறார். அவர் வந்து மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று கூறி கல்யாணத்தை நிறுத்துவதும் அதனால் பெண்ணை கல்யாண மண்டபத்தில் இருக்கும் ஹீரோவே ஏற்றுக்கொள்வதும் ஆதிகாலத்து தமிழ் சினிமா formula. உதயநிதி – ஹன்சிகா காதல் ரசிகர்கள் மனதில் துளியும் ஒட்டவில்லை. அவர்கள் எப்போது சேர்கிறார்கள் எப்போது பிரிகிறார்கள் என்பதே புரியவில்லை. திரைக்கதையில் அவர்களது முக்கியத்துவத்தை குறைத்து, ஆங்காங்கே ஏற்படும் சுணக்கத்தையும் தவிர்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் சந்தானத்தை விளையாட விட்டிருந்தால் ஓகே ஓகே உண்மையிலேயே double ஓகேவாக இருந்திருக்கும்.
[…] “ஒரு கல் ஒரு கண்ணாடி” (OK OK): “ஒரு சந்தானம் 32 கோடி” […]