ஆதிபகவன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கியிருக்கும் திரைப்படம். ஜெயம் ரவி இரட்டை வேடம், ஹாலிவுட் படத்திற்கு இணையான சண்டைக்காட்சிகள் என்று விளம்பரப்படுத்தி எதிர்பார்புகளை ஏற்றி விட்டிருந்தார்கள். படத்திற்கு வேறு ‘a mafioso action love story’ என்று வித்தியாசமாக ஒரு tagline. சரி அமீர் எதாவது புதிதாக எடுத்திருப்பார் என்ற அபாரமான நம்பிக்கையில் படத்திற்குச் சென்றேன். சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது என்றும் துப்பாக்கியைத் தடை செய்ய வேண்டும் (விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்) என்றும் பலர் குரல் குடுத்து வருகிறார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. சமிபகால தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் இதை கவனித்திருக்கலாம். படம் நெடுக துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதிரில் வருபவர்களை எல்லாம் காக்காய் குருவியைச் (மீண்டும் விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்) சுடுவது போல் சுட்டுத் தள்ளுபவர் தான் ஹீரோ.
