RSS Feed

சுஜாதாவின் வரிகளில் – அர்த்

March 21, 2018 by Guest Author

சமீபத்தில் எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் “விவாதங்கள் விமர்சனங்கள்” (முதல் பாதிப்பு 1985) என்ற புத்தகத்தை படித்து முடித்தேன். அந்த புத்தகக்கத்தில் பல தரப்பட்ட விஷயங்கள் இருந்தன. திரு சுஜாதா பிற பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், பிரபலங்களுடன் (திரு கமலஹாசன் – நடிகர், திரு சிவகுமார் – நடிகர், திருமதி சுஜாதா – நடிகை) நடத்திய உரையாடல்கள், திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு திரு சுஜாதா எழுதிய விமரிசனங்கள் ஆகியவை எல்லாம் அந்த புத்தகத்தில் உள்ளடக்கி இருந்தன. அதில் ஒரு விமரிசனத்தை பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இனி சுஜாதா வரிகளில்

சிறு வயதில் காணாமல் போன அன்னன் தம்பிகள் பிற்காலத்தில் அமிதாப்பச்சன்களாகிப் பாடிக்கொண்டே அம்மாவைக் காப்பாற்றும் கதைகளிலிருந்து விலகிப் போய் இந்தி சினிமாவை படுக்கை அறைக்குள் நுழைந்து, மலையாளத்தனமாக அல்ல, மனோதத்துவ முறையில் நோக்கி விட்டு கேமரா விலகிக் கொள்கிறது.

“அர்த்” (டைரக்க்ஷன் மஹேஷ்) கணவன் மனைவி காதலி உறவுகளை மிச்சமில்லாமல் அந்தரங்க வியர்வை வாசனையுடன் பார்க்கிறது. பூஜா (ஷபானா ஆஸ்மி) இந்தர் (குலபூஷண் கர்பந்த்) இருவருக்கும் கல்யாணம்.  ஆரம்பத்தில் ரொம்ப சாக்லேட் கணவன் அடிக்கடி வேலை, வீடு மாற்றுகின்றான் என்ற குறை கூட நிவர்த்தியாகி ஒரு நாள் திடீரென்று ஒரு வீட்டை வாங்கி வந்து, இந்தா வச்சுக்கோ, என்று சாவி கொடுக்கிறான்.  ஏது காசு என்றல் சொந்த பிஸினஸாம். பார்ட்னர்ஷிப்பாம்.  இது அசடு, வீட்டுக்கு அலங்காரங்கள் பண்ணி போர்டு மாட்டிக் கொண்டிருக்கையில் கணவன் கோவாவில் பார்ட்னர்ஷிப்பில் பிசியாக இருக்கிறான் சினிமா நடிகை கவிதாவுடன் சிநேகம் (ஸ்மிதா பட்டீல்).

பெண்டாட்டியை விவாகரத்து பண்ணிவிட்டு என்னைக் கல்யாணம் செய்து கொண்டாக வேண்டும் என்று கெடு வைக்கிறாள் கவிதா (ஒரு ஹிஸ்டிரிகல் சினிமா நடிகையை அற்புதமாக சித்திரித்திருக்கிறார் ஸ்மிதா). கணவன் பரிதாபத்துக்கும், மிருக இச்சைக்கும் இடையில் திண்டாடுகிறான், தீர்மானிக்கிறான். மனைவியிடம் பட்டென்று விஷயத்தை சொல்லிவிடுகிறான்.  வீடு வாங்க பணம் கொடுத்ததே அவள்தான் என்று அறிந்ததும் பின்னணியில் நூறு வயலின்கள் இல்லாமல் திடுக்கிடுகிறாள்.

வீட்டை காலி செய்துவிட்டு ஹாஸ்டலில் போய்த் தங்குகிறாள்.  விவாகரத்துக்கு காகிதங்களில் தயக்கமில்லாமல் கையழுத்திடுகிறாள்.  ஒரு பாடகரின் மென்மையான சிநேகிதம் கிடைக்கிறது.  ஆசை நாயகியால் துரத்தப்பட்டு திரும்பி வந்து மன்னிப்பு கோரும் கணவன் மற்றும் சிநேகிதன் இருவரையுமே நிராகரித்துவிட்டு தனியாக வந்து வேலைக்காரக் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தரத் தீர்மானிக்கிறாள்.

கண்ணகி கதை உல்ட்டா பண்ணினால் கிடைக்கும் பற்பல சாத்தியக்க்கூறுகளில் (உ.ம்.மீண்டும் கோகிலா) இதுவம் ஒன்று.  திறமையான டைரக்க்ஷன், நடிப்பால் உயர்கிறது.  ஷபானா ஒரு பார்ட்டியில் கணவனையும் ஆசை நாயகியையும் பார்த்து விட்டு ஒரு கூச்சல் போடுகிறாளே, அதிலேயே ஊர்வசி தெரிகிறது. ரோகிணி ஹட்டங்காடி (காந்தி) இதில் மராட்டிய வேலைக்காரியாக வந்து மார்பு தெரிய தரை துடைப்பது ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரே பிரச்சினையை (அடல்ட்டரி) மேல் மட்டமும், கீழ்மட்டமும் எப்படிச் சமாளிக்கின்றன என்று வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது நேர்த்தி.

மகேஷ் பட், சாய் பராஞ்ச்பே போன்று தமிழ் சினிமாவில் விசு, மௌலி, கோமல், லட்சுமி போன்றவர்கள் வரமுடியும் என்றுதான் தோன்றுகிறது.  ஏன் வரவில்லை.

இந்த விமரிசனத்தை படிக்கும்போதே, டைரக்டர் திரு பாலு மகேந்திராவின் “மறுபடியும்” படம் நினைவுக்கு வந்தது. அதில், ரேவதி, ரோகினி திறமையாக நடித்திருந்தாலும், ஹிந்தி படத்தையும் ஒரு முறை பார்க்கத்தூண்டியது திரு சுஜாதா அவர்களின் விமர்சனம்.

– P.S. Balaji


No Comments »

No comments yet.

Leave a Reply

Your email address will not be published.