தோனி – படத்தின் பெயரை மட்டும் விளையாட்டுத் தனமாக வைத்துவிட்டு படம் முழுக்க நமது கல்வி முறையை கடுமையாகச் சாடியிருக்கிரார்கள். மகேஷ் மன்ஜரேகரின் மராட்டிய படமான ‘சிக்க்ஷநக்ஷய ஆய்ச்சா க்ஹோ’ வின் தழுவலே இப்படம். ஆனால் பிரகாஷ் ராஜ் மற்றும் ஞானவேல் தங்களது திரைக்கதை மூலமாக படத்தை ஓர் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர். இன்று நம் நாட்டில் கல்வி முறையால் பாதிக்கப்பட்டும், கல்வியை காரணமாக காட்டியும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தினம் தினம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் இச்செய்திகளை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறோம். இவ்வாறு நடைபெறும் ஓவ்வொரு தற்கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதனால் எப்படி ஒரு தலைமுறையும் சமூகமும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் வக்கிரமாக தோலுரித்துக் காட்டுகிறது இத்திரைப்படம்.