ஆதிபகவன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கியிருக்கும் திரைப்படம். ஜெயம் ரவி இரட்டை வேடம், ஹாலிவுட் படத்திற்கு இணையான சண்டைக்காட்சிகள் என்று விளம்பரப்படுத்தி எதிர்பார்புகளை ஏற்றி விட்டிருந்தார்கள். படத்திற்கு வேறு ‘a mafioso action love story’ என்று வித்தியாசமாக ஒரு tagline. சரி அமீர் எதாவது புதிதாக எடுத்திருப்பார் என்ற அபாரமான நம்பிக்கையில் படத்திற்குச் சென்றேன். சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது என்றும் துப்பாக்கியைத் தடை செய்ய வேண்டும் (விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்) என்றும் பலர் குரல் குடுத்து வருகிறார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. சமிபகால தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் இதை கவனித்திருக்கலாம். படம் நெடுக துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதிரில் வருபவர்களை எல்லாம் காக்காய் குருவியைச் (மீண்டும் விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்) சுடுவது போல் சுட்டுத் தள்ளுபவர் தான் ஹீரோ.
இந்தப் படத்தின் புதுமை என்னவென்றால் படத்தில் அப்படி செய்பவர் ஹீரோ கிடையாது. இரண்டு ஜெயம் ரவியும் கெட்டவர்கள் தான். கெட்டவர்களுக்கிடையே நடக்கும் யுத்தம் தான் கதை. முதல் பாதி முழுவதும் ஆதி பாத்திரத்தை சுற்றியே நகர்கிறது. இந்தியாவில் இருந்து தாய்லாந்திற்கு பஞ்சம் பிழைக்க போன ஆதி எப்படி அங்கே டான் ஆகிறார் என்ற ‘நாயகன்’ காலத்துக் கதையத் தான் மீண்டும் சொல்கிறார்கள். இதற்கிடையே ஆந்தராவில் ரெட்டி சகோதரர்கள் இருவர் ஜெயம் ரவியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவரை ரவுண்டு கட்டித் தேடுகிறார்கள். ரெண்டு இடங்களிலும் கதை மாறி மாறி நடக்கிறது. படத்தில் நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நீது சந்திரா. இவரது பாத்திரம் சமர் த்ரிஷாவை ஞாபகப்படுத்தினால் அதற்கு நங்கள் பொறுப்பல்ல! கிளைமாக்ஸ்சில் இவருக்கென ஒரு பத்து நிமிட சண்டைக் காட்சி வேறு. ஜெயம் ரவி ஈவு இரக்கம் எதுவும் இல்லாமல் நீது சந்திராவை அடித்து துவம்சம் செய்கிறார். ஏதேனும் பெண்கள் அமைப்பு இதைப் பார்த்து விட்டு படத்திற்கு தடை கோரினால் ஆச்சர்யம் ஏதும் இல்லை! கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருந்தால் படையப்பா நீலாம்பரி போல் பேசப் பட்டிருப்பார். ஆனால் கோட்டை விட்டு விட்டார்.
இரண்டாம் பாதியில் தான் மற்றொரு ஜெயம் ரவி (பகவான்) வருகிறார். அவருக்கும் முதல் பாதியில் நடந்த விஷயங்களுக்கும் உள்ள தொடர்பை ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து நமக்கு சொல்ல விழைகிறார் இயக்குனர். பகவான் பாத்திரத்துக்கு ஜெயம் ரவி கடினமாக உழைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு make up தான் கொஞ்சம் ஓவர் ஆகி விட்டது. சமிப காலங்களில் இதே போன்ற பெண்மைத் தனம் கொண்ட நாயகனை பல படங்களில் பார்த்துவிட்டதால் என்னவோ இந்த பகவான் பாத்திரம் பெரிதாக நம்மை ஏதும் கவரவில்லை. பகவான் ஜெயம் ரவி ஒரு எம்.பியை அவர் அறைக்கே சென்று பல மணி நேரம் காத்திருந்து கொல்வது, மற்றுமொரு எம்.பி யின் கண் முன்னே அவரது தம்பியைக் கொல்வது, மும்பையின் A.C.Pஐ போன் ரிசீவராலேயே அடித்துக் கொல்வது என்று பல காமெடிகளைச் செய்கிறார். முதல் பாதியில் ஆக்ரோஷமாக வரும் ரெட்டி சகோதரர்கள் இரண்டாவது பாதியில் உப்பு சப்பில்லாமல் போய் விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து ஜெயம் ரவி தப்பித்தவுடன் அவர்களை அம்போ என விட்டு விடுகிறார் இயக்குனர். அதன் பிறகு என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை!
இசை யுவன் ஷங்கர் ராஜா என்றால் நம்ப முடியவில்லை. பாடல்கள் அனைத்தும் படு திராபை. படம் முடிந்து பல மணி நேரம் கடந்தும் அந்த ‘பகவான்’ பின்னணி இசை இன்னும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மற்றுமொரு பலவீனம், காட்சிகள் அனைத்தும் ஒரு கோர்வையாக இல்லாதிருப்பது. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் பல இடங்களில் தொடர்பே இல்லை. ஏற்கனவே படம் எங்கும் ட்விஸ்ட் ஆக வைத்திருக்கும் இயக்குனர் படத்தின் இறுதியில் எங்கே ரெண்டு ஜெயம் ரவியும் அண்ணன் தம்பிகள் தான் என்று கூறி அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை அவர்களது அம்மா வந்து தடுத்து நிறுத்தும் எம்.ஜி.ஆர் காலத்து ட்விஸ்டை வைத்துவிடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. படத்தின் கடைசியில் ஒரு வசனம் வருகிறது. ஆதி, பிகவானைப் பார்த்துச் சொல்கிறார்: “உன்னால நான் நிறைய கஷ்டப் பட்டுட்டேன்” என்று. அது அப்படியே ரசிகர்களின் மன நிலையை பிரதிபலிக்கிறது. இது தான் ரசிகர்களின் மன நிலையை அறிந்து படம் எடுப்பது போல என்று நினைத்துக் கொண்டேன்.
இன்றைய இயக்குனர்கள் பலர் உலக சினிமா எடுக்கிறேன் என்று வெளிநாட்டிற்கு சென்று ஸ்டைலிஷாக படம் எடுப்பதையே விரும்புகிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று படம் எடுப்பதால் மட்டுமே அது உலக சினிமா ஆகிவிடாது அமீர் சார். நம் நாட்டைப் பற்றியும், நம் மக்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் சினிமாவில் பிரதிபலித்து அதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதே உலக சினிமா. அதற்கு நீங்கள் கடைசியாக எடுத்த பருத்திவீரன் படமே சான்று. ரசிகர்களும் அமீர் போன்ற ஒரு இயக்குனரிடம் இருந்து உலகத் தரமான சினிமாவை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஆதி பகவன் போன்ற ஒரு படத்தையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
[rating: 3.5]
உங்கள் நேரத்தை ” ஹரிதாஸ் ” பார்த்து மற்றும் எழுதி பயனுள்ள முறையில் செலவு செய்திருக்கலாம்