திரு சோ ராமசாமியின் நீண்ட கால வாசகன் / ரசிகன் என்ற முறையில் அவரைப் பற்றிய என்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
திரு சோவைப் போல தேசப் பற்றுடையவரும் , தேசத்தின் நன்மைக்காக சிந்திப்பவரும், எனக்கு தெரிந்த வரை யாரும் இல்லை என்பது தான் எனது திடமான கருத்து. அதேபோல் தன் மனதுக்கு பட்டதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தியத்திலும் அவருக்கு நிகர் அவர் தான்.
Emergency யின் போது அநேகமாக இந்தியாவில் இருந்த எல்லா பத்திரிக்கைகளும் அரசாங்கத்திற்கு எதிராக எழுத தயங்கிய / பயந்த பொது திரு சோ எடுத்த நடவடிக்கைகள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அவைகளை திரு சோவின் வரிகளிலேயே பார்க்கலாம்.
அதேபோல் திரு சோவைப்போல் நையாண்டியும், தீர்க்க தரிசனமும் கொண்டவர்களை பார்ப்பது மிகவும் அரிது.
அவரது நையாண்டிக்கு ஒரு உதாரணம்
“கவிஞர் கண்ணதாசன் அவர்கள், முதல்வர் கருணாநிதியை சர்ச்சிலுக்கு நிகரான ராஜதந்திரி என்று வர்ணித்திருக்கிறார். சர்ச்சிலுக்கு இது நன்றாக வேண்டும். மஹாத்மா காந்தியை அரை நிர்வாண பேக்கரி என்று வர்ணித்த சர்ச்சிலுக்கு, யாரும் இதுவரை சரியான கொடுக்கவில்லை. இப்பொழுது கருணாநிதியுடன் சர்ச்சிலை ஒப்பிட்டு, கண்ணதாசன் அவர்கள் சர்ச்சிலுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்”.
அவரது தீர்க்க தரிசனத்துக்கு பல உதாரணங்களை கூறலாம். அவற்றில் சில (திரு சோவின் வரிகளிலேயே).
மேலும், இப்போதைய பிரதமர், திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த நாட்டின் பிரதாரமாக வர வேண்டும் என்று அவர் பிரதாரமாக வருவதற்கு நான்கு ஆண்டுகள் முன்பாகவே, திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையே ஒரு ஆண்டு விழாவில் திரு சோ பேசினார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
நிறைய பேர் திரு சோவின் மீது சுமத்திய விமர்சனம், அவர் நமது மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆதரவாளர் என்பது. அது முற்றிலும் தவறு என்பதை கீழ் கண்ட இரு உதாரணங்கள் மூலம் நிரூபிக்கலாம்.
- முதன் முறை ஜெயலலிதா அவர்கள் ஆட்சி நிறைவு பெற்றபோது தமிழத்தில் பெரும்பாலானோர், அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதினார்கள். திரு நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததினால் அதிமுக மீண்டும் ஆட்சி பிடிக்கக் கூடும் என்ற நிலை உருவானது. அப்பொழுது திரு சோவின் பெரு முயற்சியினால் திரு மூப்பனார் அவர்கள் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் (காங்கிரசில் இருந்து பிரிந்து) உருவானது. அதே போல் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தவுடன் அந்த கட்சியை திமுகவுடன் கூட்டணி சேர்க்க [தன் வாழ்வில் பெரும் பகுதியில் திமுக எதிர்த்திருக்கிறார். அந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பல முறை எழுதியிருக்கிறார்) திரு சோ அவர்கள் ஒரு பாலமாக செயல் பட்டார். அந்த தேர்தலில் திமுக, தாமாக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா அவர்கள், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார்.
- மத்தியில் பாரதீய ஜனதா ஜெயித்து முதன் முதலில்திரு வாஜ்பாய் அவர்கள் பிரதாரமாக வரக்கூடிய சந்தர்ப்பம் உருவான நேரம். தமிழகத்தில் அதிக சீட் ஜெயிக்க பாரதிய ஜனதா அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது துக்ளக் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழா வந்தவர்களில் பெரும்பாலோர் (நான் உட்பட) அந்த கூட்டணி மிகவும் அவசியம் என்று கருதினார்கள். ஆனால் திரு சோ மட்டும் ஜெயலலிதா அவர்களை நம்பக்கூடாது. அவர்கள் கடைசி நிமிடத்தில் காலை வாரி விடுவார்கள் என்று பேசினார். கூட்டத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலோருக்கு(நான் உட்பட) அவர் மீது மிகுந்த கோபம் வந்தது. ஆனால் ஆட்சி அமைத்த 13ம் நாளில் திரு வாஜ்பேயி அரசு, ஜெயலலிதா அவர்களின் ஆதரவு கிடைக்காததால் கவிழ்ந்தது.
எல்லோரும் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், திரு சோ அவர்கள் யாரையெல்லாம் கடுமையாக விமர்சினம் செய்தாரோ, அவர்கள் எல்லோரும் அவருடைய நண்பர்களாய் தொடர்ந்தார்கள் என்பதே.
இப்படி தன் வாழ் நாள் முழுவதும், எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்தால் நமது ஊருக்கும், நாட்டிற்கும் நல்லது நடக்கும் என்பதையே நினைத்து வாழ்ந்த ஒரு மாபெரும் மனிதர் திரு சோ அவர்கள்.
அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததையும், அவருடைய திரைப்படங்களை காணவும், அவர் எழுதிய புத்தகங்களை படிக்கவும், அவர் பேசிய பேச்சினை கேட்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது முன்னோர்கள் செய்த புண்ணியம் காரணமாகவும், நான் செய்த பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.
– P. S. Balaji